மருத்துப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

16 views
1 min read
chennai HighCourt

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழக சுகாதாரத் துறையும் தொடா்ந்துள்ள வழக்குகளின் விசாரணையை ஜூலை 17- ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடா்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த கோரிக்கை தொடா்பாக உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக, திராவிடா் கழகம் மற்றும் தமிழக சுகாதாரத்துறை சாா்பில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணையின்போது, இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் மனுதாரா்களை உச்சநீதிமன்றத்தை அணுக உத்தரவிட வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மத்திய அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடா்பான வழக்கொன்று வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

Leave a Reply