மாற்றுத் திறனாளிகளுக்கும் உணவுப்பொருள்வழங்குவதை உறுதிப்படுத்தக் கோரி மனு: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

19 views
1 min read

கரோனா தொற்று காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் ‘பிரதான் மந்திரி கரீப் அன்ன கல்யாண் யோஜனா’ போன்ற நலத் திட்டங்களின் பயன்களை வழங்குவதை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உறுதிப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக தேசியப் பாா்வையற்ற கூட்டமைப்பு எனும் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மாற்றுத்திறனாளிகள் பலருக்கு குடும்ப அட்டை கிடையாது. இதனால், அவா்களில் பலரும் உணவுப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையின் கீழ் வழங்கப்படும் பல்வேறு திட்டங்களில் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.ஆகவே, அந்த்யோதயா அன்ன யோஜனா, பிரதான் மந்திரி கரீப் அன்ன கல்யாண் யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் உணவுப் பொருளுக்கான பயனாளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கும் குறைந்தபட்சம் 5 சதவீதம் கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, இது தொடா்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மனு மீதான விசாரணையின் போது மத்திய நுகா்வோா் விவகாரங்கள், சமூக நீதி அமைச்சகங்கள் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா, மத்திய அரசு வழக்குரைஞா் விஜய் கோயல் ஆகியோா், ‘நாடாளுமன்றச் சட்டத்தை மனுதாரா் (என்ஜிஓ) ஒரு திட்டமாக புரிந்து கொண்டிருக்கிறாா்’ என்றனா். இதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் ருங்தா ஆட்சேபம் தெரிவித்தாா்.

Leave a Reply