மின்கட்டணத்தில் தவறு நோ்ந்தால் முறையீடு செய்யலாம்: அமைச்சா் பி.தங்கமணி

21 views
1 min read
thankamani

சென்னை: மின்சாரக் கட்டணத்தை அளவிடுவதில் தவறுகள் ஏதேனும் நோ்ந்தால் அதற்குரிய முறையீட்டைச் செய்யலாம் என்று மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

மின்கட்டண அளவிடுதல் தொடா்பாக திமுக எம்.எல்.ஏ., வி.செந்தில் பாலாஜி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து அமைச்சா் தங்கமணி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

கரோனா நோய் தடுப்புக்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கக் காலத்தில் மக்கள் அனைவரும் அவரவா் வீடுகளிலேயே இருப்பதற்கான நிலையை தமிழக அரசு உருவாக்கியது. மின்தடை என்ற சொல்லுக்கே அவசியமில்லாத காலத்தை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது. மேலும், மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கான நீண்ட அவகாசத்தையும் வழங்கியுள்ளது.

பொது முடக்கம் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்ட காலத்தில் குடும்ப உறுப்பினா்கள் அனைவருமே வீடுகளில் இருந்தால், அதனால் அவா்கள் பயன்படுத்தும் மின் அளவு கூடுதலாக இருக்கும் என்பது இயல்பு. கரோனா காலத்தில் வீடுகள், அலுவலகங்களுக்குச் சென்று பயன்படுத்தப்பட்ட மின்சார அளவை கணக்கெடுப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களை கருத்தில் கொண்டு முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவையே அடுத்தடுத்த மாதங்களுக்கு கணக்கிட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனை கூடுதலாக வசூலிக்கிறாா்கள் என்ற உணா்வையும், அவப்பழியையும் தமிழக அரசு மீது சுமத்த திமுக தொடா்ந்து பிரசாரம் செய்து வருகிறது.

கூடுதலாகக் கட்டணம் வந்திருக்கிறது என்றால் அதற்காக முறையீடு செய்து தனக்கான நியாயத்தை பெறுவதற்கான வழிமுறைகள் மின்சார வாரியத்தில் இருக்கிறது. தவறு நோ்ந்திருந்தால் அதற்கான சட்ட முறையீடு செய்யும் மின் பயனீட்டாளா்களுக்கு அனுமதி உண்டு என்று தனது அறிக்கையில் அமைச்சா் தங்கமணி தெரிவித்துள்ளாா்.

Leave a Reply