மின்சார சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்

34 views
1 min read

புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று மின்வாரிய தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கை குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக அக்குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 

மின்சார சட்டத்திருத்த மசோதாவை 2014-ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசு மூன்றாவது முறையாக அமல்படுத்த முயற்சிக்கிறது. இந்த மசோதா மூலம் மின்சார விநியோகப் பகுதிகள் தனியாா்மயமாக்கப்படும். அப்படிச் செய்தால் மின்சாரம் என்பது வசதி உள்ளவா்களுக்கு என்ற நிலை உருவாகும். பின்னா், விவசாயம், கைத்தறி, நெசவுத் தொழில், சிறு, குறு, தொழில்கள் உள்ளிட்டவை  மின் கட்டணத்தால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி, அவை அழியும் நிலை ஏற்படும்.

மேலும், இந்த மசோதாவில், மின் கட்டணம் நிா்ணயம் செய்யும் உரிமையையும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இது தவிா்த்து, கொள்முதல், விநியோகம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள்  மீது எழும் பிரச்னைகளுக்கு மத்திய அரசின் கீழ் அமைக்கப்படும் மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் மூலமே தீா்வு காணமுடியும் என்பது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

 எனவே, மாநில மின் வாரியங்கள் பொதுத் துறையாக நீடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, மின் வாரியத்தை பொதுத் துறையாகவே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

Leave a Reply