முண்டந்துறை அருகே 10ஆவது கரடி சிக்கியது

18 views
1 min read
bear

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட கடையம் வனச்சரகம் பகுதியில் இதுவரை இல்லாத வகையில் 70 நாள்களில் 10 கரடிகள் பிடிபட்டுள்ளன.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட கடையம் வனச்சரகம் பகுதியில் காட்டுப்பன்றி, கரடி, மிளா, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களில் பயிர்களை நாசப்படுத்தி வந்தன. இந்நிலையில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள முதலியார்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் கூட்டம் கூட்டமாக கரடிகள் வந்து சப்போட்டா, மா, தென்னை, நெல்லி உள்ளிட்ட மரங்களில் காய்களை சேதப்படுத்திச் செல்வதாக வந்த புகாரையடுத்து அங்கு வனத்துறையினர் கண்காணிப்புக் காமிரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

இதில் இதுவரை 5 கரடிகள் பிடிபட்ட நிலையில் இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்தக் கூண்டில் மேலும் ஒரு கரடி சிக்கியுள்ளது. இந்தத் தோட்டத்தில் பிடிபட்ட 6ஆவது கரடி என்பது குறிப்பிடத்தகது. இதுகுறித்து தோட்டக் காவலாளி சுப்புக்குட்டி கூறியது, இந்தத் தோட்டத்தில் 2 ஏக்கருக்கு மேல் சப்போட்டா பயிரிட்டுள்ளோம். மேலும் மா, நெல்லி, தென்னையும் உள்ளன. இப்போது சப்போட்டா விளைச்சல் உள்ளதால் அந்த வாடைக்குக் கரடி கூட்டம் கூட்டமாக தோட்டத்தில் புகுந்து நாசப்படுத்தி வந்தன. 

இது குறித்து வனத்துறையினரிடம் புகாரளித்ததையடுத்து கூண்டு வைத்து இந்தத் தோட்டத்தில் மட்டும் இதுவரை 6 கரடிகளைப் பிடித்துள்ளனர். மேலும் கரடிகள் உள்ளன. அவற்றையும் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்றார். முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட பகுதிகளில் இதுவரை அதிகமாக சிறுத்தைகள் பிடிபட்டு வந்த நிலையில் 70 நாள்களில் 10 கரடிகள் பிடிபட்டுள்ளன. இந்தத் தனியார் தோட்டத்தில் மட்டும் 50 நாள்களில் 6 கரடிகள் பிடிபட்டுள்ளன. 

காட்டுப் பன்றிகள், கரடிகள், மிளா உள்ளிட்ட விலங்குகள் விளை நிலங்களை நாசப்படுத்தி வரும் நிலையில் அவற்றை வனத்துறையினர் ரோந்துப் பணி மூலமும், கண்காணிப்புக் காமிரா மூலம் கண்காணிப்பதன் மூலமும் கண்காணித்து விரட்டவோ கூண்டுகள் வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விடவோ முழுமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது அவற்றை வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தால் அவற்றைப் பிடிக்கவோ வனப்பகுதிக்குள் விரட்டவோ உடனடியாக நடவடிக்கை எடுக்கமுடியும் என்றனர்.

TAGS
bear Mundanthurai

Leave a Reply