முதல் டெஸ்டிலிருந்து என்னை ஏன் நீக்கினீர்கள்?: ஸ்டூவர்ட் பிராட் கோபம்!

19 views
1 min read
broad11

 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து தன்னை நீக்கியதற்கு வருத்தமும் கோபமும் அடைந்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.

செளதாம்ப்டனில் இங்கிலாந்து – மே.இ. தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கடந்த புதன் அன்று தொடங்கியது. மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 28 அன்று முடிவடைகிறது.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் மனைவி கேரி-க்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இதனால் முதல் டெஸ்டிலிருந்து ஜோ ரூட் விலகியுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாஸ் பட்லர் துணை கேப்டனாகச் செயல்படுகிறார். முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தேர்வாகவில்லை. இதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள்.
கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாகச் சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் ஆட்டத்தை பிராட் தவறவிட்டுள்ளார். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ந்து ஆறு டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளதால் அனைத்து வீரர்களுக்கும் தகுந்த ஓய்வளித்து, தேவைப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்த அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் நல்ல உடற்தகுதியுடன் வீரர்களால் ஆட்டத்தில் பங்களிக்க முடியும் என நிர்வாகம் நம்புகிறது. இதன்படி முதல் டெஸ்டில் பிராட் தேர்வாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல் டெஸ்டிலிருந்து தன்னை நீக்கியதற்கு வருத்தமும் கோபமும் அடைந்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தன் கோபத்தையும் வருத்தத்தையும் மறைக்காமல் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

நான் உணர்ச்சிவசப்படுபவன் அல்லன். ஆனால் கடந்த சில நாள்களாக நான் வருத்தத்தில் உள்ளேன். முதல் டெஸ்டில் என்னைச் சேர்த்துக் கொள்ளாமல் போனதற்காக ஏமாற்றமடைந்தேன் என்று மட்டும் சொல்வது சரியாக இருக்காது. நீங்கள் உங்கள் செல்பேசியைக் கீழே போட்டு அது உடைந்தால் மட்டுமே வருத்தமடைவீர்கள்.

நான் கோபமும் வெறுப்பும் அடைந்துள்ளேன். என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கடந்த சில வருடங்களாகச் சிறப்பான முறையில் பந்துவீசியுள்ளேன். அணியில் எனக்கான இடம் உள்ளது என நினைக்கிறேன். ஆஷஸ் தொடரில் விளையாடினேன். தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று வெற்றி பெற்றோம். 

நேற்றிரவு தேர்வுக் குழுத் தலைவரிடம் பேசினேன். 13 வீரர்களின் தேர்வில் அவர் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் ஆடுகளத்தின் தன்மையைக் கொண்டே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனது எதிர்காலம் குறித்து எனக்குத் தெளிவான விளக்கம் வேண்டும். அதுகுறித்து நேர்மறையான பதில் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்தது. அதேசமயம், அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் திறமையின் அடிப்படையில் தேர்வாகியுள்ளார்கள். அனைவரும் நல்ல உடற்தகுதியில் உள்ளதால் தேர்வு செய்வது கடினம் தான். போட்டி கடுமையாக உள்ளதால் எல்லோரும் அதிக அளவிலான திறமையை வெளிப்படுத்துவார்கள். அணியில் இடம் கிடைக்கவேண்டும் என்கிற அழுத்தம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்றார்.

 

TAGS
Stuart Broad

Leave a Reply