முதல் டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் விளையாடுவது சந்தேகம்!

22 views
1 min read
broad11

 

புதன் அன்று இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து – மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் டேரன் பிராவோ, ஹெட்மையர், கீமோ பால் ஆகிய மூன்று வீரர்களும் இடம்பெறவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்குச் செல்ல அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக 25 மே.இ. தீவுகள் வீரர்களும் 11 நிர்வாகிகளும் இங்கிலாந்துக்கு வந்துள்ளார்கள். அனைத்து வீரர்கள், நிர்வாகிகளுக்கும் மேற்கிந்தியத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் கரோனா டெஸ்ட் பரிசோதனை நடைபெற்றது. அனைவரின் முடிவுகளும் நெகடிவ் என வந்துள்ளது.

முதல் டெஸ்டுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ ரூட்டின் மனைவி கேரி-க்கு விரைவில் 2-வது குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் பயிற்சி முகாமிலிருந்து விலகவுள்ள ஜோ ரூட், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார். மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு தனது வீட்டில் 7 நாள்களுக்குச் சுயமாகத் தனிமைப்படுத்திகொள்வார். 2-வது டெஸ்ட் தொடங்கும் முன்பு இங்கிலாந்து அணியினருடன் ஜோ ரூட் இணைந்து கொள்வார். இதனால் முதல் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும் ஜாஸ் பட்லர் துணை கேப்டனாகவும் செயல்படவுள்ளார்கள்.

முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோர் இடம்பெறவில்லை. சாம் கரண், பென் ஃபோக்ஸ் போன்ற வீரர்கள் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 

13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்களின் தேர்வு தான் சிக்கலாக இருக்கும் என்று அறியப்படுகிறது. ஆண்டர்சனுக்குத் துணையாக இளம் வீரர்களான ஜோஃப்ரா ஆர்ச்சரும் மார்க் வுட்டும் விளையாட வேண்டும் என இங்கிலாந்து அணி விரும்புவதாகத் தெரிகிறது. இதனால் முதல் டெஸ்டில் மூத்த வீரரான ஸ்டூவர்ட் பிராட் இடம்பெற வாய்ப்பில்லை என்று அறியப்படுகிறது. இதன்மூலம் கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாகச் சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் ஆட்டத்தை அவர் தவறவிடவுள்ளார். 

அடுத்ததாகத் தொடர்ந்து ஆறு டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளதால் அனைத்து வீரர்களுக்கும் தகுந்த ஓய்வளித்து, தேவைப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்த அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் நல்ல உடற்தகுதியுடன் வீரர்களால் ஆட்டத்தில் பங்களிக்க முடியும் என நிர்வாகம் நம்புகிறது. இதன்படி முதல் டெஸ்டில் பிராட் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

TAGS
Eng vs WI Test

Leave a Reply