முதல் டெஸ்ட்: 3-ம் நாள் உணவு இடைவேளையின்போது மே.இ. தீவுகள் 159/3

20 views
1 min read
Brathwaite_(Kraigg_)

 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 3-ம் நாளின் மதிய உணவு இடைவேளையின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

செளதாம்ப்டனில் இங்கிலாந்து – மே.இ. தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கடந்த புதன் அன்று தொடங்கியது. மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 28 அன்று முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 116 நாள்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் மனைவி கேரி-க்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இதனால் முதல் டெஸ்டிலிருந்து ஜோ ரூட் விலகியுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாஸ் பட்லர் துணை கேப்டனாகச் செயல்படுகிறார்.

மழை காரணமாக முதல் நாளன்று 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி, 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது.

2-ம் நாளன்று ஹோல்டரின் அசத்தலான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹோல்டர் 6 விக்கெட்டுகளும் கேப்ரியல் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். பிறகு ஆடிய மே.இ. அணி 2-ம் நாளின் முடிவில் 19.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது. 

64 பந்துகள் வரை தாக்குப்பிடித்த ஷாய் ஹோப், 16 ரன்களில் பெஸ் பந்துவீச்சில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கினார் தொடக்க வீரர் பிராத்வெயிட். எனினும் அரை சதமெடுத்த பிறகு நீண்ட நேரம் அவரால் நிலைக்க முடியவில்லை. 65 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மதிய உணவு இடைவேளையின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி 47 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. புரூக்ஸ் 27, சேஸ் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

TAGS
England v West Indies

Leave a Reply