முதல் முறை: கரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா

18 views
1 min read
Baby born to COVID-19 negative mother at Delhi's RML hospital tests positive

கரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா

புது தில்லி: தில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் கரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் முறையாக கருவில் இருக்கும் சிசுவுக்கு கரோனா பாதிப்பு தாய் மூலம் ஏற்பட்டிருப்பதாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதுவரை, பிறந்த குழந்தைக்கு, கரோனா நோயாளிகள் மூலம்தான் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தைகளுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

ஜூன் 11ம் தேதி 24 வயது கர்ப்பிணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், சிகிச்சைக்குப் பிறகு 25ம் தேதி மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டபோதும் கரோனா இருப்பதாகவே வந்தது. பிறகு ஜூலை 7ம் தேதி மீண்டும் பரிசோதித்ததில் கரோனா இல்லை என்று பரிசோதனை முடிவு வந்தது.

ஜூலை 8-ம் தேதி இரவு கர்ப்பிணிக்கு சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மணி நேரத்தில் ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை நலமாக இருக்கிறது. குழந்தைக்கு எந்த அறிகுறியும் இல்லை. 48 மணி நேரம் கழித்து மீண்டும் குழந்தைக்கு பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கரோனாவில் இருந்து குணமடைந்த தாய்க்கு, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் குழந்தை பிறந்திருப்பது இந்த பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவர் கீர்த்தி தெரிவித்துள்ளார். அதே சமயம் குழந்தைக்கு வெளியில் இருந்து கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட எந்த வழியும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

TAGS
coronavirus

Leave a Reply