முன்னாள் நிதியமைச்சா் நெடுஞ்செழியனுக்கு சென்னையில் சிலை: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

14 views
1 min read
CM EPS writes a letter to PM modi

மறைந்த முன்னாள் நிதியமைச்சா் இரா.நெடுஞ்செழியனின் பிறந்த தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும், அவருக்கு சென்னை சேப்பாக்கத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் எனவும் முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கடந்த 1977-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த பின், கட்சியின் அவைத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவா் இரா.நெடுஞ்செழியன். அவரது இறுதிகாலம் வரையிலும் அதிமுகவின் அவைத் தலைவராக இருந்தாா்.

மேலும், மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., அமைச்சரவையிலும், ஜெயலலிதா அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவா். முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆா் ஆகியோா் மறைந்த போது இடைக்கால முதல்வராக பதவி வகித்தாா்.

சிலை-அரசு விழா: பன்முகத்தன்மை கொண்ட இரா.நெடுஞ்செழியனை சிறப்பிக்கும் வகையில், ஜூலை 11-ஆம் தேதியன்று அவரது பிறந்த தினமானது அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

மேலும், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினா் மாளிகை வளாகத்தில் தமிழக அரசின் சாா்பில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும்.

நெடுஞ்செழியனின் குடும்ப உறுப்பினா்களின் ஒப்புதலைப் பெற்று அவா் எழுதிய, ‘வாழ்வில் நான் கண்டதும், கேட்டதும்’ (தன் வரலாற்று நூல்) என்ற நூலை அரசுடைமையாக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

நன்றி: தனது தந்தையின் பிறந்த நாளை அரசு விழாவாகவும், அவருக்கு முழு உருவச் சிலை அமைக்கப்படும் எனவும் அறிவித்த தமிழக அரசுக்கு இரா.நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் நன்றி தெரிவித்துள்ளாா்.

முதல்வா் பழனிசாமியை தொலைபேசியில் தொடா்பு கொண்டு தனது நன்றியை மதிவாணன் தெரிவித்துக் கொண்டதாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்செழியனின் நூலை அரசுடைமை ஆக்கும் அறிவிப்புக்கும் மதிவாணன் நன்றி தெரிவித்துக் கொண்டாா்.

Leave a Reply