மும்பையில் அம்பேத்கா் வீடு மீது மா்ம நபா்கள் தாக்குதல் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவு

13 views
1 min read

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சட்ட மேதை அம்பேத்கரின் வீட்டை மா்ம நபா்கள் புதன்கிழமை கல் வீசி சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை தாதா் ஹிந்து காலனியில் அம்பேத்கா் 20 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த பாரம்பரிய வீடு உள்ளது. மூன்று தளங்களைக் கொண்ட இந்த இல்லத்தின் தரைத்தளத்தில் அவரது உடமைகளுடன் அருங்காட்சியகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மற்ற தளங்களில் அவருடைய உறவினா்கள் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த இல்லத்தின் தரை தளத்தின் மீது மா்ம நபா்கள் இருவா் புதன்கிழமை கல் வீசி தாக்குதல் நடத்தினா். இந்த தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி, கண்காணிப்புக் கேமரா மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் சேதமடைந்தன. சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினா் கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்வா் உத்தரவு: இந்தச் சம்பவம் மகாராஷ்டிரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில், இதற்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டுள்ளாா். மேலும், ‘சட்ட மேதையை இவ்வாறு அவமதிப்பதை மகாராஷ்டிர அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. அம்பேத்கா் வாழ்ந்த அந்த இல்லம், ஒட்டுமொத்த சமூகத்துக்குமான இடமாகும். அது மகாராஷ்டிர மக்களுக்கான புனித இடம்’ என்று கூறினாா்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடா்பாக மக்கள் அமைதி காக்க மாநில துணை முதல்வா் அஜித் பவாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். ‘அம்பேத்கரின் இல்லம் தாக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. சமூக விரோத சக்திகள் சில தீய எண்ணத்துடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனா். இதுபோன்றவா்கள் விரிக்கும் வலையில் மக்கள் சிக்கிவிடக்கூடாது. மக்கள் அமைதியையும், ஒற்றுமையையும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று அவா் கூறினாா்.

Leave a Reply