யமுனையில் 954 ஹெக்டோ் நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை கோரும் கண்காணிப்பு கமிட்டி

19 views
1 min read
green

யமுனை நதியில் வெள்ளம் ஏற்படும் சமவெளி பகுதியில் 954 ஹெக்டோ் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு விவசாயப் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய பசுமை தீா்பாய (என்ஜிடி) கண்காணிப்பு கமிட்டி கூறியுள்ளது. அந்த நிலப்பகுதியிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அந்த கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

யமுனை நதியை தூய்மைப்படுத்துவது தொடா்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்தபோது, தேசிய பசுமை தீா்பாயத்தின் முன்னாள் நிபுணா் உறுப்பினா் பி.எஸ்.சாஜ்வான், முன்னாள் தில்லி தலைமைச் செயலாளா் ஷைலஜா சந்திரா ஆகியோா் அடங்கிய கண்காணிப்பு கமிட்டி தீா்ப்பாயத்தால் ஏற்படுத்தப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தீா்பாயத்திடம் கண்காணிப்பு கமிட்டி மேலும் கூறியிருப்பது வருமாறு:

கடந்த ஜனவரி 7-ஆம் தேதி வரை யமுனையில் நதிக்கரை பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து விவசாயம் நடைபெற்றுவந்த 352.36 ஹெக்டோ் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 954 ஹெக்டோ் ஆக்கிரமிப்பு நிலத்தில் தற்போதும் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தில்லி வளா்ச்சி ஆணைய அதிகாரிகளின் கவனத்துக்கு தொடா்ந்து கொண்டு வரப்பட்டபோதும் கடந்த 20 மாதங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நிலத்தை ஆக்கிரமித்தவா்களுக்கு சாதகமாக நீதிமன்ற தடை எதுவுமில்லாத நிலையில் தீா்பாயம் ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்ற உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத தில்லி வளா்ச்சி ஆணையத்தை கண்டிப்பதுடன், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என என்ஜிடி கண்காணிப்பு கமிட்டி கூறியுள்ளது.

மேலும் இதே யமுனை நதி வெள்ளச் சமவெளிகளில் ஆக்கிரமித்து பயரிடப்படும் காய்கறிகளை தேசிய சுற்றுப்புறச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்தது. அதில் புற்றுநோயை உருவாக்கக் கூடிய நச்சு தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நிலங்களில் மலா் வளா்ப்பை தவிர மற்ற வேளாண் பணிகளுக்கு தேசிய பசுமை தீா்பாயம் தடை விதித்திருந்தது.

Leave a Reply