ராஜபாளையத்தில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு: கொலையா? தற்கொலையா?

16 views
1 min read
WhatsApp_Image_2020-07-07_at_2

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாயமான இளைஞர் சடலமாக செவ்வாய்க்கிழமை காலை  மீட்கப்பட்டார். 

ராஜபாளையம் அருகே உள்ள அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன்(23) கட்டட தொழிலாளியான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்காசி மாவட்டம் பந்தப்புளி கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும், மாற்று சமுதாயத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு பெண் வீட்டில்  கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் மகேந்திரன், நாகலட்சுமியை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில், ராஜபாளையம் அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். இருவருக்கும் மகேந்திரனின் உறவினர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

இந்நிலையில்  காலை, நாகலட்சுமியின் தந்தை நீராத்திலிங்கம் தனது மகளை காணவில்லை, கண்டு பிடித்து தரக் கோரி கரிவலம் வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் அழைத்ததன் பேரில், மாலை 5 மணியளவில் மகேந்திரனின் உறவினர்கள் நாகலட்சுமியை காவல்துறையினர் முன்னிலையில், பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்த மகேந்திரன் மாயமாகி உள்ளார். இவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சங்கரன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் ஆலையின் பின்புறம் உள்ள குடோன் அருகே மரத்தில்  இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர்  விசாரணை நடத்தியபோது  மாயமான மகேந்திரன் என தெரியவந்தது. சம்பவ இடத்தில் ராஜபாளையம் டி.எஸ்.பி நாகசங்கர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் மகேந்திரன் சடலத்தை மீட்ட காவல் துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறப்பு குறித்து மகேந்திரனின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை பகலில் இருந்து நாகலட்சுமியின் உறவினர்கள் மகேந்திரனின் புகைப்படத்தை வைத்து அண்ணா நகர் பகுதியில் உள்ளவர்களிடம் அடையாளம் விசாரித்ததாக புகார் தெரிவித்தனர். மேலும் பெண்ணின் உறவினர்கள் இணைந்து மகேந்திரனை கொன்று விட்டு, சடலத்தை தற்கொலை போல மரத்தில் தொங்க விட்டுள்ளதாக காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.

மகேந்திரன் மற்றும் பந்தப்புளியில் உள்ள மகேந்திரனின் உறவினர் ஆகியோருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்ததாக  சிலரின் பெயர்களையும், இறந்தவரின் உறவினர்கள் காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
 

TAGS
tamilnadu news

Leave a Reply