ரீமேக் படங்களில் தொடர்ந்து நடிப்பது ஏன்?: ஹரிஷ் கல்யாண்

16 views
1 min read
harish1xx

 

பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், 2018-ல் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். இதன்பிறகு சில படங்களில் நடித்து, தமிழ்த் திரையுலகின் நம்பிக்கைக்குரிய இளம் கதாநாயகனாக உள்ளார். சமீபத்தில் விக்கி டோனர் என்கிற ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கான தாராள பிரபு படத்தில் நடித்தார். அடுத்ததாக, பெல்லி சூப்புலு என்கிற தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். 

ரீமேக் படங்களில் தொடர்ந்து நடிப்பது பற்றி ஒரு பேட்டியில் ஹரிஷ் கல்யாண் கூறியதாவது:  

பெல்லி சூப்புலு என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக்கில் நடித்து முடித்துவிட்டேன். என்னுடைய நண்பர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். படத்தொகுப்பில் இருந்த காட்சிகளைப் பார்த்தேன். படம் மிக நன்றாக வந்துள்ளது. நான் ஏன் அடுத்தடுத்து ரீமேக் படங்களில் நடிக்கிறேன் என என்னிடம் கேட்கிறார்கள். இயக்குநர் சசி சாரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் அது தாமதமாகிவிட்டது. பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக் வாய்ப்பு என்னிடம் வந்தபோது உடனே ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் தெலுங்கில் இந்தப் படம் நல்ல வரவேற்பை அடைந்தது. சமீபத்தில் கேட்ட இரு கதைகளும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளனும் ஒரு புதுமுகமும் தான் இக்கதைகளைச் சொன்னார்கள். இரு கதைகளும் சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் இருந்தன. எனவே இப்படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.

கரோனா பாதிப்பால் அவதிப்படும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனுக்காக தனது சம்பளத்தைத் தானாகக் குறைத்துக்கொள்ள முன்வந்தார் ஹரிஷ் கல்யாண். தமிழ்த் தயாரிப்பாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு விஜய் ஆண்டனி சார் தனது சம்பளத்திலிருந்து 25% குறைத்துக்கொண்டுள்ளார். இதற்காக அவருக்கு வாழ்த்துகள். இதைச் செய்வது மிகப் பெரிய விஷயம். நானும் இதைத் தொடரவுள்ளேன் என்றார். 
 

TAGS
Harish Kalyan

Leave a Reply