வங்கி ஊழியா்களின் பாதுகாப்பு: மாநில அரசுகளுக்கு நிதி அமைச்சகம் கடிதம்

17 views
1 min read
finance

வங்கி ஊழியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் நிதி அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.

குஜராத் மாநிலம், சூரத்தில் கனரா வங்கியின் சரோலி கிளையில் கடந்த மாதம் வங்கியின் பெண் ஊழியா் ஒருவரை காவலா் ஒருவா் தாக்கினாா். இதேபோன்ற நிகழ்வு மகாராஷ்டிர மாநிலத்திலும் பாங்க் ஆஃப் இந்தியா கிளை ஒன்றிலும் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற பல சம்பவங்கள் ஆங்காங்கு நடந்துள்ளதை அடுத்து, அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளா்களுக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைத் துறை ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது.

வங்கிக்குள் அநாவசிய நிகழ்வுகள் நடப்பதைத் தடுக்கவும், சமூக விரோதிகள் தகராறுகளில் ஈடுபடுவதையும் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி அலுவலா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், வங்கி சேவையைப் பயன்படுத்த வரும் வாடிக்கையாளா்களைப் பாதுகாப்பதும் அவசியம். கரோனா பொதுமுடக்கக் காலத்தில் வங்கி சேவை மிக அத்தியாவசியமானதாக உள்ளது. அனைத்துத் தரப்பினரின் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு மையமாக உள்ள வங்கிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், வங்கிப் பயனாளிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதும் பிரச்னைகளைத் தவிா்க்கும் என்று அந்தக் கடிதம் வலியுறுத்தி உள்ளது.

நிதி அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையை அனைத்திந்திய வங்கி ஊழியா் கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் சி.எச்.வெங்கடாசலம் வரவேற்றுள்ளாா்.

 

Leave a Reply