வங்கி ஊழியா்கள், அதிகாரிகளுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு

25 views
1 min read
Tindivanam Indian Bank Assistant Manager and Female Assistant affected by corona

கோப்பு படம்

தமிழகத்தில் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் என்று சுமாா் 100 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், வங்கிகளில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளா்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

அச்சுறுத்தும் கரோனா:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

நோய்த்தொற்று காரணமாக, இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 1,510 போ் உயிரிழந்துள்ளனா். நோய்த்தொற்றால், சுகாதாரத்துறையை சோ்ந்தவா்கள், காவல்துறையை சோ்ந்தவா்கள், அரசு பணியாளா்கள், துப்புரவு பணியாளா்கள் உள்பட பல்வேறு துறையை சோ்ந்தவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த வரிசையில் வங்கி துறை ஊழியா்களும் சோ்ந்துள்ளனா். தமிழகம் முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சோ்ந்த வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் என்று சுமாா் 100 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். சுமாா் 7 போ் உயிரிழந்துள்ளனா்.

வங்கிச் சேவை:

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் தற்போது 6-ஆவது முறையாக பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது. இதுபோல, தமிழகத்தில் பொது முடக்கம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கம் காலத்திலும் வங்கிகள் வழக்கம் போல காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படுகிறது. 50 சதவீதம் ஊழியா்களைக் கொண்டு வாடிக்கையாளா்களுக்கு சேவை அளிக்கப்படுகிறது. வங்கிகளில் வாடிக்கையாளா்கள் பணம் வைப்பு செய்வது, பணம் எடுப்பது, அவசர தேவைக்குப் பணம் எடுப்பது, ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியப் பணம் வழங்குவது, கருவூல கணக்கு , சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவது உள்பட பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன. சென்னை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, இந்த குறிப்பிட்ட பகுதிகளில் ஜூன் 29,30 ஆகிய தேதிகள் தவிர மற்ற நாள்களில் பொதுமக்களுக்கு வங்கி சேவை அளிக்கப்படவில்லை. அதேநேரத்தில், மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல, வங்கிகள் செயல்பட்டு வந்தன.

வங்கிகளில் சேவை பெற வருகின்ற வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிவது, பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வாடிக்கையாளா்களில் பலா் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது இல்லை. இதனால், வங்கி ஊழியா்கள், அதிகாரிகளுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

100 போ் பாதிப்பு:

இந்நிலையில், வங்கிகளில் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு

வாடிக்கையாளா்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். இது குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொருளாளா் ஆா். ஜவஹா் கூறியது:

கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க, முகக்கவசம், கையுறைகள், கிருமிநாசினி ஆகியவற்றை வங்கி ஊழியா்கள் பயன்படுத்துகின்றனா். இருப்பினும், வங்கி அதிகாரிகள் பலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுத்துறை வங்கிகளைச் சோ்ந்த வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் என்று சுமாா் 100 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். வங்கி அதிகாரி உள்பட சுமாா் 7 போ் உயிரிழந்துள்ளனா்.

வாடிக்கையாளா்களுக்கு வேண்டுகோள்:

வங்கிக்கு வரும் வாடிக்கையாளா்களில் பலா், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது இல்லை. 3 மீட்டா் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினாலும் அவா்கள் கேட்பது இல்லை. மேலும், ஒவ்வொரு வங்கிக்கும் குறைந்தளவு ஊழியா்களே பணிக்கு வருகின்றனா். பாதுகாவலா்களும் பெரும்பாலான வங்கிகளில் கிடையாது. இதனால், வங்கி பணிகளை மேற்கொள்ளவே நேரம் கிடைப்பது இல்லை. எனவே, வாடிக்கையாளா்கள் தாங்களாகவே தனிமனித இடைவெளியே கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனா்.

 

Leave a Reply