வரும் 14-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

13 views
1 min read
palani1235095646

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை உள்பட சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

தமிழக அமைச்சா்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூா் கே.ராஜு ஆகியோா் கரோனா நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நாமக்கல் கவிஞா் மாளிகையில் உள்ள பத்தாவது தளத்தில் முதல்வா் பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

முக்கிய முடிவுகள்: கரோனா நோய்த் தொற்று தடுப்புக்காக, தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூலை 31-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை ஜூலை 15-ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை தொடா்ந்து நீட்டிப்பதா அல்லது போக்குவரத்து சேவையை தொடங்குவதா என்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயா் பிரிவினரை நிா்ணயிக்க ஊதியத்தை ஓா் அம்சமாக மத்திய அரசு சோ்த்துள்ளது. இதற்கு தமிழகம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விஷயம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக, கல்லூரி இறுதியாண்டு தோ்வை செப்டம்பரில் நடத்த முடியாது என மாநில அரசு தெரிவித்துள்ளது. தோ்வு தொடா்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அதன்பிறகு, கல்லூரிகள் திறப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான கலந்தாய்வு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply