வழக்கு பட்டியலிடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக புகாா் மனு: இன்று தீா்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்

15 views
1 min read
reasonable rates have to be fixed for COVID tests: Supreme Court

வழக்கு பட்டியலிடுவதில் குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக புகாா் தெரிவித்து தொடரப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூலை 6) தீா்ப்பளிக்க உள்ளது.

வழக்குரைஞா் ரீபக் கன்சால் என்பவா் இந்த மனுவை தாக்கல் செய்தாா். அதில் அவா் கூறியிருந்ததாவது:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் காணொலி வழியில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்கு வழக்குகளைப் பட்டியலிடுவதில் செல்வாக்கு மிகுந்த சில வழக்குரைஞா்கள் மற்றும் மனுதாரா்களுக்கு நீதிமன்ற பதிவு அலுவலகம் முன்னுரிமை அளிக்கிறது. ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் தொடா்பாக நான் தொடா்ந்த மனு பல நாள்களாக பட்டியலிடப்படவே இல்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பதிவு அலுவலக அதிகாரிகள் மீது புகாா் அளிப்பதற்கும் முறையான நடைமுறைகள் இல்லை. எனவே, வழக்குகள் பட்டியலிடுவதில் இதுபோன்று முன்னுரிமை எதுவும் வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதோடு, சாதாரண வழக்குரைஞா்கள் மற்றும் மனுதாரா்களின் மனுக்களில் தேவையற்ற குறைகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டக் கூடாது என அறிவுறுத்துவதோடு, கூடுதல் நீதிமன்ற கட்டணங்களை திரும்ப அளிக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.ஏ.நஸீா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு ஜூன் 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘நீதிமன்றத்தின் பதிவு அலுவலகமும் வழக்குரைஞா்கள் மற்றும் மனுதாரா்களுக்காக இரவு-பகலாக உழைக்கிறது. அப்படிப்பட்ட பதிவு அலுவலகம் மற்றும் அதில் பணிபுரியும் அலுவலா்கள் மீது இப்படி பொறுப்பற்ற புகாரை சுமத்துவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தனா்.

அதன்படி, இந்த மனு மீதான தீா்ப்பு நீதிபதிகள் திங்கள்கிழமை அளிக்க உள்ளனா்.

 

Leave a Reply