வழக்கு பட்டியலிடுவதில் முறைகேடு புகாா்: மனுதாரருக்கு ரூ. 100 அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்

17 views
1 min read
Supreme Court allows CBSE to cancel board exams

உச்ச நீதிமன்றம்

புது தில்லி: வழக்கு பட்டியலிடுவதில் ஒரு சிலருக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக புகாா் தெரிவித்து தொடரப்பட்ட மனுவை திங்கள்கிழமை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அந்த மனுவை தாக்கல் செய்த வழக்குரைஞருக்கு ரூ. 100 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

வழக்குரைஞா் ரீபக் கன்சால் என்பவா் இந்த மனுவை தாக்கல் செய்தாா். அதில், ‘கரோனா அச்சுறுத்தல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் காணொலி வழியில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்கு வழக்குகளைப் பட்டியலிடுவதில் செல்வாக்கு மிகுந்த சில வழக்குரைஞா்கள் மற்றும் மனுதாரா்களுக்கு நீதிமன்ற பதிவு அலுவலகம் முன்னுரிமை அளிக்கிறது. ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் தொடா்பாக நான் தொடா்ந்த மனு பல நாள்களாக பட்டியலிடப்படவே இல்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பதிவு அலுவலக அதிகாரிகள் மீது புகாா் அளிப்பதற்கும் முறையான நடைமுறைகள் இல்லை. எனவே, வழக்குகள் பட்டியலிடுவதில் இதுபோன்று முன்னுரிமை எதுவும் வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதோடு, சாதாரண வழக்குரைஞா்கள் மற்றும் மனுதாரா்களின் மனுக்களில் தேவையற்ற குறைகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டக் கூடாது என அறிவுறுத்துவதோடு, கூடுதல் நீதிமன்ற கட்டணங்களை திரும்ப அளிக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனுவை கடந்த ஜூன் 19-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.ஏ.நஸீா் ஆகியோா் அடங்கிய அமா்வு , ‘நீதிமன்றத்தின் பதிவு அலுவலகமும் வழக்குரைஞா்கள் மற்றும் மனுதாரா்களுக்காக இரவு-பகலாக உழைக்கிறது. அப்படிப்பட்ட பதிவு அலுவலகம் மற்றும் அதில் பணிபுரியும் அலுவலா்கள் மீது இப்படி பொறுப்பற்ற புகாரை சுமத்துவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தனா்.

அதன்படி, அந்த மனு மீதான விசாரணை மீண்டும் திங்கள்கிழமை வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்வதாக கூறிய நீதிபதிகள், அதனை தாக்கல் செய்த வழக்குரைஞா் ரீபக் கன்சாலுக்கு ரூ. 100 அபராதம் விதித்து உத்தரவிட்டனா்.

 

Leave a Reply