வாழப்பாடி அருகே சாலையோரத்தில் விபத்து ஏற்படும் நிலையில் தரைமட்டத்தில் நிற்கும் மின் டிரான்ஸ்பார்மர்

13 views
1 min read
குமாரசாமியூரில் விபத்து ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில், பாதுகாப்பு வேலியின்றி காணப்படும் தரைமட்ட மின் மாற்றி.

குமாரசாமியூரில் விபத்து ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில், பாதுகாப்பு வேலியின்றி காணப்படும் தரைமட்ட மின் மாற்றி.

 

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குமாரசாமியூரில், விபத்து ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் தரைமட்டத்தில் நிற்கும் மின் டிரான்ஸ்பார்மரைச் சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

வாழப்பாடி அடுத்த அத்தனுார்பட்டியில் இருந்து குமாரசாமியூர் வழியாக மாரியம்மன்புதுார் கிராமத்திற்கு செல்லும் கிராமப்புற இணைப்புச்சாலையில், வாழப்பாடி வடக்கு பிரிவுக்கு உட்பட்ட (எண்: எஸ்.எஸ்.01) மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற பகுதியிலுள்ள விவசாய பம்புசெட்டுகள் மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கு இந்த மின் டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த மின் டிரான்ஸ்பார்மரை மற்ற டிரான்ஸ்பார்மர்களைப் போல கம்பங்களுக்கு இடையே உயரத்தில் பொருத்தப்படாமல், தரைமட்டத்தில் இருந்து திண்ணைப் போன்று கட்டப்பட்டு அதற்குமேல் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கூட எட்டும் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின் டிரான்ஸ்பார்மரைச் சுற்றி இதுவரை, பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை.

இதனால், இவ்வழியாக அத்தனுார்பட்டி, குமாரசாமியூர் மற்றும் மாரியம்மன்புதுார் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் விளையாட்டுதனமாக தொட்டுப் பார்த்தால் விபரீதங்கள் ஏற்படும் ஆபாயம் நீடித்து வருகிறது.
எனவே, குமாராமியூரிலுள்ள தரைமட்ட மின் டிரான்ஸ்பார்மரைச் சுற்றி பாதுகாப்பு கம்பி வேலி அமைத்திட வேண்டுமென இப்பகுதி மக்களிடையே  கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் உழவன் முருகன் கூறுகையில், ‘குமாரசாமியூர் மின் டிரான்ஸ்பார்மர் எஸ். எஸ்.01, சாலையோரத்தில் தரைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரைச் சுற்றி பாதுகாப்பு கம்பி வேலி அமைக்கப்படவில்லை. திறந்த நிலையில் காணப்படுவதால், இவ்வழியாக செல்லும் குழந்தைகள், கால்நடைகள் விபத்துக்குள்ளாகும் நிலை நீடித்து வருகிறது. எனவே, மின் டிரான்ஸ்பார்மரைச் சுற்றி பாதுகாப்பு கம்பி வேலி அமைத்திட வாழப்பாடி மின் கோட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply