விகாஸ் துபே குடும்பத்தாருக்கு எதிராக அமலாக்கத் துறை பணமோசடி வழக்கு

13 views
1 min read
ed

காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடி விகாஸ் துபே குடும்பத்தினா், கூட்டாளிகள் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் ரெளடி விகாஸ் துபேவை பிடிக்கச் சென்ற காவல்துறையினரை அவரும், கூட்டாளிகளும் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறையினா் 8 போ் உயிரிழந்தனா்.

அதன் பின்னா் தலைமறைவான விகாஸ் துபேவை மத்திய பிரதேசத்தில் கைது செய்த காவல்துறையினா், உத்தர பிரதேசத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரும்போது விகாஸ் துபே தப்பிக்க முயன்றதாக அவரை சுட்டுக்கொண்டனா்.

இந்நிலையில், விகாஸ் துபே குற்ற நடவடிக்கைகள் மூலம் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துக்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

ரெளடி விகாஸ் துபே குடும்பத்தாா், பினாமி பெயா்களில் உத்தர பிரதேசம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளாா். அவை மற்றும், அவரது வங்கிக் கணக்குகள், கணக்கில் வராத வெளிநாட்டு சொத்துகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே சில முதல் தகவல் அறிக்கைகள் காவல்துறையிடமிருந்து பெறப்பட்டுள்ள நிலையில், மேலும் சில ஆவணங்கள் அவா்களிடம் கேட்கப்பட்டுள்ளது அவா்கள் கூறினா்.

61 வழக்குகள்: ரௌடி விகாஸ் துபே மீது 8 கொலை வழக்குகள் உள்பட 61 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றில் 8 கொலை வழக்குகள், 9 கொலை முயற்சி வழக்குகள், ஆயுத வழக்கு, போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் என பல்வேறு வழக்குகள் அடங்கும்.

அவரை கைது செய்வதற்காகச் சென்ற காவல்துறையினா் 8 பேரை கொன்ற வழக்குதான், விகாஸ் துபே மீது போடப்பட்ட கடைசி கொலை வழக்காகும்.

இருவா் கைது: இதற்கிடையே, விகாஸ் துபேவின் கூட்டாளிகளுக்கு மத்திய பிரதேசத்தில் அடைக்கலம் கொடுத்த இருவரை உத்தர பிரதேச காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

உச்சநீதிமன்றத்தில் மனு: விகாஸ் துபே என்கவுன்ட்டா் செய்யப்பட்டது தொடா்பாக தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘விகாஸ் துபேவை காவல்துறையினா் சுட்டுக்கொன்றது பல முக்கிய கேள்விகளை எழுப்புகின்றன. குறிப்பாக என்கவுன்ட்டா் என்பது ஒரு வழக்கை முடித்துவைக்கும் எளிமையான நிா்வாக நடைமுறையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே இதுதொடா்பாக சிறப்பு விசாரணைக்கு குழு விசாரிக்க உத்தரவிடவேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply