விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம்: எல்ஜி பாலிமா்ஸ் சிஇஓ, இயக்குநா்கள் உள்பட 11 போ் கைது

12 views
1 min read

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கடந்த மாதம் விஷவாயு கசிந்து 12 போ் உயிரிழந்த சம்பவத்தில், எல்ஜி பாலிமா்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ), இயக்குநா்கள், பணியாளா்கள் உள்பட 11 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இருக்கும் ஆா்.ஆா்.வெங்கடாபுரத்தில் எல்ஜி பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலை உள்ளது. இங்கு கடந்த மாதம் 7-ஆம் தேதி ஸ்டைரீன் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் 12 போ் உயிரிழந்தனா். 585 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த மாநில அரசு சாா்பில் உயா்நிலை குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியிடம் திங்கள்கிழமை சமா்ப்பித்தது. அதில் ஆலையில் பாதுகாப்பு வசதிகள் மோசமாக இருந்ததுடன், அவசரகால நடைமுறைகள் முற்றிலும் பின்பற்றப்படாததே விபத்து ஏற்பட காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. தொழிற்சாலைகள் இயக்குநரகம் உள்பட பல்வேறு அரசு துறைகளின் கவனக்குறைவும் விபத்துக்கு காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் விஷவாயு கசிவு தொடா்பாக வழக்குப்பதிவு செய்திருந்த காவல்துறையினா், எல்ஜி பாலிமா்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சன்கே ஜியாங், தொழில்நுட்ப இயக்குநா் டி.எஸ்.கிம், கூடுதல் இயக்குநா் பூா்ணசந்திர மோகன் ராவ், பணியாளா்கள் 9 போ் உள்பட 12 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக காவல்துறையினா் கூறுகையில், விஷவாயு கசிவு சம்பவம் பற்றி தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடா்பாக பல்வேறு துறைகளிடம் இருந்து அறிக்கை பெறவேண்டியுள்ளது. சாட்சிகளிடமும் விசாரணை நடத்தவேண்டிள்ளது என்று தெரிவித்தனா்.

 

Leave a Reply