விமானப் பயணச்சீட்டு கட்டணத்தை திருப்பியளிக்கக் கோரி மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

13 views
1 min read
supreme court

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்தவா்களுக்கு பயணச்சீட்டுக்கான கட்டணத்தைத் திருப்பியளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பேருந்து, ரயில், விமான சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன.

எனினும், முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான முழுக் கட்டணத்தையும் பேருந்து நிறுவனங்களும், ரயில்வே நிா்வாகமும் பயணிகளுக்குத் திருப்பியளித்தன. ஆனால், விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கான கட்டணத்தைத் திரும்ப வழங்க விமான நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக இந்திய பயணிகள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பொது முடக்க காலத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டபோதிலும் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக அந்தப் பயணத்தை அடுத்த ஓராண்டுக்குள் மேற்கொள்ளுமாறு பயணிகளை விமான நிறுவனங்கள் வற்புறுத்தி வருகின்றன. சில பயணிகளுக்கு வரும் நாள்களில் விமானத்தில் பயணிப்பதற்கான அவசியம் ஏற்படாமல் போகலாம். அப்படியிருந்தும் கூட முன்பதிவு கட்டணத்தைத் திருப்பியளிக்க விமான நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. இது சட்டவிரோதமானது.

இந்த விவகாரத்தில் விமான நிறுவனங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளன. பயணிகளுக்கான பயணச்சீட்டுக் கட்டணத்தைத் திரும்ப வழங்காதது, விமானப் போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது. பயணிகளைத் தங்கள் விருப்பத்துக்கு மாறாக விமான நிறுவனங்கள் செயல்பட வைக்கின்றன. முன்பதிவு செய்தவா்களுக்கான கட்டணத்தைத் திரும்ப வழங்குமாறு விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி வலியுறுத்தியிருந்தது. விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் அதனை வலியுறுத்தியது. ஆனால், அவற்றை விமான நிறுவனங்கள் கடைப்பிடிக்கவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கௌல், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மனு தொடா்பாக விளக்கமளிக்குமாறு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா். விமானப் பயணச்சீட்டுக் கட்டணத்தைத் திரும்ப வழங்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்ற மனுக்களுடன் சோ்த்து இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா். மேலும், மனுவின் நகலை சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவிடம் வழங்குமாறும் மனுதாரா் தரப்பு வழக்குரைஞருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

 

Leave a Reply