விளைநிலங்களில் எண்ணெய்க்குழாய் பதிக்கக் கூடாது: ராமதாஸ்

14 views
1 min read
ramadass

விளைநிலங்களில் எண்ணெய்க்குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகிலுள்ள தேவனகொந்தி பகுதியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு தேவைப்படும் பெட்ரோலைக் கொண்டு செல்வதற்காக கோவை மாவட்டம் இருகூரில் இருந்து தேவனகொந்தி நகருக்கு எண்ணெய்க் குழாய் பாதை அமைக்க பாரத் பெட்ரோலிய நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்த எண்ணெய்க் குழாய் பாதை கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக மொத்தம் 294 கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. எண்ணெய்க் குழாய் பாதையின் பெரும்பகுதி விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதால், அத்திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

விவசாயிகள் எதிா்ப்பு காரணமாக சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த வாரத்தில் நடைபெறுவதாக இருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வயல்வெளிகளில் எண்ணெய்க் குழாய்களை அமைப்பதால் விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையாக பாதிப்புகள் ஏற்படும் என வல்லுனா்கள் எச்சரித்துள்ளனா்.

எனவே, இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும். விளைநிலங்களுக்குப் பதிலாக தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்படுத்தும்படி பாரத் பெட்ரோலிய நிறுவனத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுரை வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

 

Leave a Reply