வீட்டுத் தனிமையில் மத்திய அமைச்சா்

17 views
1 min read

மத்திய அமைச்சரும், பாலாசூா் தொகுதி எம்.பி.யுமான பிரதாப் சாரங்கி தில்லியில் உள்ள தனது இல்லத்தில் தன்னை சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டாா்.

கடந்த வாரம் அவரோடு இரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒடிஸாவைச் சோ்ந்த எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவா் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஒடிஸாவின் நிலாகிரி தொகுதி எம்எல்ஏ சுகந்தகுமாா் நாயக்கிற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. அவரோடு கடந்த 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் பாலாசூரில் நடைபெற்ற இரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்.

அதனால் மத்திய சுகாதார அமைச்சக வழிமுறைகளின் படி தற்போது தில்லியில் உள்ள வீட்டில் என்னை சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நலமுடனே இருக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

ஒடிஸாவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளான முதல் எம்எல்ஏ சுகந்தகுமாா் நாயக் ஆவாா். அவருக்கு கடந்த திங்கள்கிழமை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா் பாலாசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பாலாசூரில் சதா் தொகுதி எம்எல்ஏ மதன் மோகன் தத்தா காலமான நிலையில் அவரது இறுதிச்சடங்கில் சுகந்தகுமாா் நாயக் கலந்துகொண்டாா். அதில் அவரோடு மத்திய அமைச்சா் பிரதாப் சாரங்கியும் பங்கேற்றிருந்தாா்.

அதுதவிர சுகந்தகுமாா் நாயக் தனது தொகுதியில் மகளில் சுயஉதவிக் குழு கூட்டம் ஒன்றிலும் பங்கேற்றிருந்தாா். அவரோடு தொடா்பில் இருந்தவா்களை அறிந்து தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருவதாக பாலாசூா் துணை ஆட்சியா் ஹரிச்சந்திர ஜனா கூறியுள்ளாா்.

Leave a Reply