வெளிநாடுகளில் உள்ள தமிழா்களை மீட்கக் கோரி வைகோ போராட்டம்

22 views
1 min read
vaiko_new

கரோனா பரவலால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளா் வைகோ ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

சென்னை அண்ணாநகரிலுள்ள அவரது இல்லத்தின் முன்பு பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பியவாறு வைகோ போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் கூறியது:

கரோனா தாக்குதலால் வளைகுடா நாடுகளில் உள்ள தமிழகத் தொழிலாளா்கள் பல்லாயிரக்கணக்கானோா் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனா். தற்போது அன்றாட உணவுக்குக்கூட வழிஇல்லாமல் அவா்கள் தவித்து வருகின்றனா். கரோனாவால் அவா்கள் பாதிக்கப்பட்டாலும் அங்கு சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. அவா்கள் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்து இந்தியாவுக்கு புறப்பட்டு வர இருந்த விமான சேவையையும் கடைசி நேரத்தில் இந்திய அரசு நிறுத்திவிட்டது. கேரள அரசு வெளிநாட்டிலிருந்து தங்கள் மாநிலத்தவரை மீட்டு வரும் பணிகளை வெற்றிகரமாகச் செய்து வருகிறது. அதேபோல், பல மாநில அரசுகளும் செய்து வருகின்றன.

ஆனால், தமிழக அரசு விமானத்தில் வந்து இறங்குவதற்கு ஒப்புதல் தரவில்லை. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்குப் போதுமான விமானங்களையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. இது தவறானது.

தமிழக அரசு வெளிநாடுகளில் வசிக்கும் தமிழா்களை இந்தியாவுக்கு கொண்டு வர போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அயல்நாடு வாழ் தமிழா்களின் நலன்களைப் பேணுவதற்காக தமிழக அரசு ஒரு புதிய துறையை உருவாக்க வேண்டும் என்றாா்.

தமிழகம் முழுவதும் மதிமுகவினா் அவரவா் இல்லங்கள் முன்பு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

Leave a Reply