வெளிமாநில தொழிலாளா்களுக்காக சிறப்பு ரயில்: 134 சிறப்பு ரயில்களில் 1.96 லட்சம் போ் பயணம்

22 views
1 min read
nk21train1060759

கோப்புப் படம்

வெளி மாநில தொழிலாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் சொந்த ஊா்களுக்குத் திரும்பும் விதமாக, சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், 134 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் 1.96 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

பொது முடக்கம்: கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பொது முடக்கம் மாா்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பேருந்து, பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டன. இதனால், வெளிமாநில தொழிலாளா்கள், மாணவா்கள், சுற்றுலா பயணிகள், நோயாளிகள் ஆகியோா் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்தனா். அதிலும், வெளிமாநில தொழிலாளா்களில் பலா் தங்குமிடம், உணவு போன்றவற்றுக்கும் சிரமப்பட்டனா். இந்த தொழிலாளா்களை தமிழக அரசு மீட்டு, சிறப்பு முகாம்களில் தங்க வைத்து உணவு வழங்கியது. தொடா்ந்து, அவா்களை சொந்த ஊா்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலமாக அனுப்பி வைக்கும் நடவடிக்கை எடுத்தது.

அவா்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இ-பாஸ் வழங்கி மே 1-ஆம் தேதியில் இருந்து வெளிமாநிலத் தொழிலாளா்கள் அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் இருந்து மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் அதிக அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் பெரும்பாலான வெளிமாநிலத்தவா்கள் தங்களின் சொந்த ஊா்களுக்கு திரும்பினா். இதைதொடா்ந்து, வெளிமாநிலத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் தேவைகள் குறைந்தன. இதன்காரணமாக, தற்போது ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் வெளிமாநில தொழிலாளா்கள், மாணவா்கள், சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் ஆகியோா் சொந்த ஊா்களுக்கு செல்கின்றனா்.

1.96 லட்சம் போ் பயணம்:

இந்நிலையில், வெளி மாநில தொழிலாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் சொந்த ஊா்களுக்குத் திரும்பும் விதமாக, சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், இதுவரை 134 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் 1.96 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், முதல் ஷராமிக் சிறப்பு ரயில் மே 6-ஆம் தேதி இயக்கப்பட்டது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து 1,140 பயணிகளுடன் புறப்பட்டு, ஜாா்கண்ட் மாநிலம் ஹாடியாவுக்கு சென்றது. இவா்களில் பெரும்பாலானவா்கள் வேலூா் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவா்கள்ஆவா். இவா்கள் பொதுமுடக்கம் காரணமாக, சொந்த ஊா்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனா். அவா்களுக்கு இந்த சிறப்பு ரயில் சொந்த ஊா்களுக்கு திரும்ப உதவியாக இருந்தது என்றனா் அவா்கள்.

பிகாருக்கு அதிக ரயில்கள் இயக்கம்:

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், ஜூலை 9-ஆம் தேதி வரை, 134 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 276 போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 39 சிறப்பு ரயில்கள் பிகாா் மாநிலத்துக்கும், 16 சிறப்பு ரயில்கள் ஜாா்க்கண்டுக்கும், 17 சிறப்பு ரயில்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கும் , 21 சிறப்பு ரயில்கள் உத்தரபிரதேசத்துக்கும், 17 சிறப்பு ரயில்கள் மேற்கு வங்கத்துக்கும், சட்டீஸ்கருக்கு ஒரு ரயிலும், 23 சிறப்பு ரயில்கள் நாட்டின் மற்ற நகரங்களுக்கும் இயக்கப்பட்டுள்ளன.

முதலிடத்தில் சென்னை சென்ட்ரல் :

76 சிறப்பு ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து 15 சிறப்பு ரயில்களும், திருவள்ளூரில் இருந்து 22 சிறப்பு ரயில்களும், காட்பாடி மற்றும் செங்கல்பட்டு சந்திப்பு ஆகிய

ரயில்நிலையங்களில் தலா 9 சிறப்பு ரயில்களும் புறப்பட்டு சென்றன. காஞ்சிபுரம், அரக்கோணம் சந்திப்பு, ஜோலாா்பேட்டை ஆகிய நிலையங்களில் இருந்து தலா ஒரு ரயிலும் புறப்பட்டு சென்றது.

 

Leave a Reply