வேலூர் சிப்பாய் புரட்சி தினம்: ஆட்சியர் எஸ்.பி மரியாதை

19 views
1 min read
vellore

வேலூரிலுள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை

 

வேலார் – நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டமான வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு நாளையொட்டி, வெள்ளிக்கிழமை வேலூரிலுள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

வேலூர் கோட்டையில் மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தென்னிந்திய துருப்புகள் கடந்த 1805-ஆம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர். அந்த ஆண்டில்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இந்தியப் படை வீரர்கள் யாரும் தங்கள் சமய அடையாளங்களை அணிவதோ, தலையில் குடுமி வைத்திருப்பதோ கூடாது என்றும், ஐரோப்பிய ராணுவ உடைகளை  மட்டுமே அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. 

இதன்மூலம் இந்திய சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணியவும், மாட்டுத் தோலால் ஆன பட்டையை அணியவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த உத்தரவு இந்து, முஸ்லிம் வீரர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. 

இதையடுத்து வேலூர் கோட்டையில் இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி நள்ளிரவில் புரட்சி செய்தனர். இந்தப் புரட்சியில், 800 இந்திய சிப்பாய்களும், 177 ஆங்கிலேயே அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு அடித்தளமாக அமைந்த இந்தப் புரட்சி வேலூர் சிப்பாய் கலகம் என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் புரட்சியில் உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 10-ஆம் தேதி சிப்பாய் புரட்சி நினைவு  தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, 214-ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

இதையொட்டி, வேலூர் கோட்டை மக்கான் சந்திப்பில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 

TAGS
Soldier Revolution Day

Leave a Reply