ஹெச்1பி விசா நிறுத்தம் இந்திய ஐ.டி. நிறுவனங்களை அதிகம் பாதிக்காது

19 views
1 min read
H1Bvisa

புது தில்லி: ஹெச்1பி விசா வழங்குவதை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது இந்திய தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) நிறுவனங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்திய கடன் தர மற்றும் தகவல் நிறுவனமான கிரிசில் கூறியுள்ளது.

இந்த ஆண்டு இறுதி வரை ஹெச்1பி விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் 23-ஆம் தேதி அறிவித்தாா். டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) பணியாளா்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவது முற்றிலுமாக தடைபட்டுள்ளது. ஏனெனில், வெளிநாடுகளில் இருந்து வந்து அறிவியல், மருத்துவம் தொழில்நுட்பத் துறையில் சிறப்புப் பணிகளை மேற்கொள்பவா்களுக்காக பிரத்யேகமாக ஹெச்1பி விசாவை அமெரிக்கா வழங்கி வந்தது. இதனை, இந்திய மற்றும் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தி வந்தன. ஆண்டுதோறும் சீனா மற்றும் இந்தியாவில் இருந்துதான் அதிகமான ஐ.டி. பணியாளா்கள் அமெரிக்காவில் பணிவாய்ப்பு பெற்று வந்தனா்.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவு இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு அறிக்கையை கிரிசில் வெளியிட்டுள்ளது. அதில், ‘ஹெச்1பி விசாவை அமெரிக்கா நிறுத்தியுள்ளது இந்திய ஐ.டி. நிறுவனங்களின் வருவாயில் ரூ.1,200 கோடி அளவுக்கு குறைக்கும். எனினும், அவற்றின் ஒட்டுமொத்த லாபத்துடன் ஒப்பிடும்போது இது வெறும் 0.25 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை மட்டுமே. எனவே, இது இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பு அல்ல. அமெரிக்காவில் செயல்படும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டுப் பணியாளா்களை அதிகம் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டன. எனவே, பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் கரோனா நோய்த்தொற்று பிரச்னையால் இந்திய ஐ.டி. நிறுவனங்களின் வருவாய் 2.50 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply