ஹோல்டர் வேகத்தில் சுருண்டது இங்கிலாந்து: முதல் இன்னிங்ஸில் 204-க்கு ஆல் அவுட்

20 views
1 min read
Holder, Gabriel restricted England to 204 in first innings

மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சௌதாம்ப்டனில் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. மழை காரணமாக தாமதமாக போடப்பட்ட டாஸில் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. மழை தொடர்ந்து குறுக்கிட்டதால், முதல் நாள் ஆட்டத்தில் வெறும் 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து.

இதைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. மேற்கிந்தியத் தீவுகளின் அசத்தல் பந்துவீச்சால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 2-ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின்போது 5 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து தடுமாறி வந்தது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் துணை கேப்டன் பட்லர் ஓரளவு பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த நிலையில் தனது அடுத்தடுத்த ஓவர்களில் முறையே ஸ்டோக்ஸ் (43 ரன்கள்), பட்லர் (35 ரன்கள்) மற்றும் ஆர்ச்சர் (0) ஆகியோரை வீழ்த்தினார் ஹோல்டர்.

இதன்பிறகு, டொமினிக் பெஸ் சற்று நிதானம் காட்ட அந்த அணி 200-ஐத் தாண்டியது. இதையடுத்து, கடைசி விக்கெட்டாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 10 ரன்களுக்கு கேப்ரியல் பந்தில் போல்டானார். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெஸ் 31 ரன்கள் எடுத்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் மிரட்டலாக பந்துவீசிய ஹோல்டர் 6 விக்கெட்டுகளையும், கேப்ரியல் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

TAGS
ENG vs WIN

Leave a Reply