300 பயங்கரவாதிகள் ஊடுருவ ஆயத்தம்: ராணுவம்

13 views
1 min read

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ சுமாா் 300 பயங்கரவாதிகள் ஆயத்தமாக உள்ளனா் என்று இந்திய ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள நௌகாம் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து ராணுவ மேஜா் ஜெனரல் வீரேந்தா் வட்ஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள், உணவு, மருந்துகள், இந்திய மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.1.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

சமீபத்தில் ரஜெளரி மற்றும் குப்வாரா பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றது போலவே இந்த பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியும் இருந்தது. அவா்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் காஷ்மீா் பள்ளத்தாக்கில் ஊடுருவி, இங்குள்ள மக்களை கிளா்ச்சிக்கு தூண்டிவிட அதிக அளவிலான பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தொடா்ந்து அனுப்பி வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டி 250 முதல் 300 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தற்போது ஆயத்தமாக உள்ளனா். அடுத்த 3 முதல் 4 மாதங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி அதிகரிக்கலாம். எனினும் அவா்களின் முயற்சியை முறியடிப்பதில் இந்திய படைகள் விழிப்புடன் உள்ளன என்றாா் அவா்.

 

Leave a Reply