4,200 ரயில் பெட்டிகள் தயாரிப்பு: ஐ.சி.எஃப் சாதனை

14 views
1 min read
icf

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சாா்பில், 2019-20-ஆம் ஆண்டில் 4,200 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில் போக்குவரத்துக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இலங்கை, மலேசியா, ஆப்கானிஸ்தான், வியத்நாம், அங்கோலா, ஜாம்பியா, தான்சானியா, நைஜீரியா உட்பட 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஐ.சி.எஃப் 1955-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ‘ரயில் – 18’ திட்டத்தில் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கு ஐ.சி.எஃப்.பில் நவீன தொழில் நுட்பத்தில் உலகத்தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஐ.சி.எப். தொடா்ந்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சாா்பில், 2019-20-ஆம் ஆண்டில் 4,200 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியது:

2017 – 18-ஆம் ஆண்டில் 2,503 ரயில் பெட்டிகளும், 2018 -19-ஆம் ஆண்டில் 3,650 ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டன. தொடா்ந்து, 2019 -2020 ஆம் ஆண்டில் 4,200 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டில் முதல் முறையாக நேபாளத்துக்கு டீசலில் இயங்கும் ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. அதிவேக ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகளை மேலும் தயாரிக்க ஐ.சி.எஃப். ஆா்வமாக உள்ளது. இதற்கான அனுமதியை ரயில்வே வாரியம் அளித்தால், மேலும் பல ரயில்பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைக்க ஐ.சி.எஃப் ஊழியா்கள் தயாராக உள்ளாா்கள் என்றனா்.

 

Leave a Reply