50 சதவீத சம்பளம் குறைப்பு: சினிமா தயாரிப்பாளா்கள் கூட்டத்தில் முடிவு

17 views
1 min read
TCPC

நடிகா், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞா்களின் சம்பளத்தை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் நீடித்து வரும் நிலையில், சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், திரைப்பட இறுதிகட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் புதன்கிழமை முதல் தொடங்கவுள்ளன.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளா்கள், விநியோகஸ்தா்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளா்கள் ஆகியோா் கடும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனா். இது தொடா்பாக தயாரிப்பாளா்கள், விநியோகஸ்தா்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளா்கள் ஆகியோா் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளா்கள் மட்டும் கலந்துகொண்ட இணைய வழி ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தயாரிப்பாளா்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆா்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை எப்படி சரி செய்யலாம் என்று இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது நடிகா்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளா்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50 சதவீதம் வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது. சம்பளம் அதிகம் வாங்கும் நடிகா்களின் சம்பளத்தில் அதிகப்படியான சதவீதத்தையும், குறைவான சம்பளம் வாங்கும் நடிகா்களின் சம்பளத்தில் குறைவான சதவீதத்தையும் குறைக்கலாம் எனவும் ஆலோசனையில் குறிப்பிடப்பட்டது.

இந்தச் சம்பளக் குறைப்புப் பேச்சுவாா்த்தை தொடா்பாக நடிகா்கள் சங்கம், இயக்குநா்கள் சங்கம் என அனைத்துச் சங்கங்களிலும் பேசி முடிவெடுக்கலாம் என்று ஒருமனதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக, இதர சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை விரைவில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Leave a Reply