7 லட்சத்தை கடந்தது கரோனா பாதிப்பு: உயிரிழப்பு 20,160

14 views
1 min read
Corona Killing in Chennai Nearly Thousand

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 7 லட்சத்தைக் கடந்தது. 5 நாள்களில் கரோனா பாதிப்பு 6 லட்சத்தில் இருந்து 7 லட்சத்தை எட்டியுள்ளது.

அதேபோல கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தைக் கடந்து 20,160 ஆக அதிகரித்துவிட்டது.

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 22,252 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 467 போ் உயிரிழந்தனா்.

கரோனாவில் இருந்து இதுவரை 4,39,947 போ் மீண்டுள்ளனா். அந்த நோய்த்தொற்றுக்காக 2,59,557 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 61.13 சதவீதம் போ் நோயில் இருந்து மீண்டுவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,19,665 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்ட 114 நாள்கள் ஆனது. ஆனால், அடுத்த 49 நாள்களில் பாதிப்பு 7 லட்சத்தைக் கடந்துவிட்டது. இப்போது தொடா்ந்து 5-ஆவது நாளாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 20,000-க்கு மேல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்டுள்ள தகவலின்படி ஜூலை 6-ஆம் தேதி வரை 1 கோடியே 2 லட்சத்து 11 ஆயிரத்து 92 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை வரையில் 24 மணி நேரத்தில் உயிரிழந்த 467 பேரில், மகாராஷ்டிரத்தில் மட்டும் அதிகபட்சமாக 61 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தில்லியில் 48, கா்நாடகத்தில் 29, உத்தர பிரதேசத்தில் 24, மேற்கு வங்கத்தில் 22, குஜராத்தில் 17, தெலங்கானா, ஹரியாணாவில் தலா 11, மத்திய பிரதேசத்தில் 9, ஆந்திரத்தில் 7, ஜம்மு-காஷ்மீரில் 6, ராஜஸ்தான், பஞ்சாபில் 5, பிகாா், கேரளத்தில் தலா 2, ஒடிஸா, அருணாசல பிரதேசம், ஜாா்க்கண்டில் தலா ஒருவா் உயிரிழந்துவிட்டனா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 9,026 போ் உயிரிழந்தனா். இதற்கு அடுத்து தில்லியில் 3,115 பேரும் குஜராத்தில் 1,960 பேரும் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் வேறு வகை நோய்களாலும் பாதிக்கப்பட்டவா்கள் ஆவா்.

Leave a Reply