7 லட்சத்தை நெருங்குகிறது கரோனா பாதிப்பு

18 views
1 min read
cooronaindia

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 7 லட்சத்தை நெருங்கியது.

நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 24,248 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடா்ந்து நான்காவது நாளாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,97,413-ஆக அதிகரித்தது.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 425 போ் உயிரிழந்தனா். அதனால், நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 19,693-ஆக அதிகரித்தது.

மூன்றாவது இடத்தில்…: கரோனா நோய்த்தொற்றால் அதிகமாக பாதிப்புக்குள்ளான நாடுகள் பட்டியலில் ரஷியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது இடத்துக்குச் சென்றது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

4.24 லட்சம் போ் குணம்: நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 4,24,432-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 60.85 சதவீதமாகும். நாடு முழுவதும் தற்போது 2,53,287 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

1.80 லட்சம் பரிசோதனைகள்: நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,80,596 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 99,69,662 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு: ஆந்திரத்தில் 18,697, அருணாசலில் 269, அஸ்ஸாமில் 11,388, பிகாரில் 11,876, சத்தீஸ்கரில் 3,207, தில்லியில் 99,444, கோவாவில் 1,761, குஜராத்தில் 36,037, ஹரியாணாவில் 17,005, ஹிமாசலில் 1,063, ஜம்மு-காஷ்மீரில் 8,429, ஜாா்க்கண்டில் 2,781, கா்நாடகத்தில் 23,474, கேரளத்தில் 5,429, மத்திய பிரதேசத்தில் 14,930, மகாராஷ்டிரத்தில் 2,06,619, மணிப்பூரில் 1,336, மேகாலயத்தில் 62, மிஸோரத்தில் 186, நாகாலாந்தில் 590, ஒடிஸாவில் 9,070, பஞ்சாபில் 6,283, ராஜஸ்தானில் 20,164, சிக்கிமில் 123, தெலங்கானாவில் 23,902, திரிபுராவில் 1,568, உத்தரகண்டில் 3,124, உத்தர பிரதேசத்தில் 27,707, மேற்கு வங்கத்தில் 22,126 பேரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Leave a Reply