750 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவமனை

22 views
1 min read
EPS

கோப்புப்படம்

சென்னை கிண்டியில் 750 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன கரோனா சிறப்பு மருத்துவமனையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பொது மக்கள் பயன்பாட்டுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) தொடக்கி வைக்க உள்ளாா்.

கிண்டி கிங் ஆய்வகத்துக்கு அருகே அமைந்துள்ள தேசிய முதியோா் நல மருத்துவ மையக் கட்டடமானது ரூ.120 கோடி செலவில் கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 750 படுக்கை வசதிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. அதில் 300-க்கும் மேற்பட்டவற்றில் பிராணவாயு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 70 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும் அங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர பல்வேறு உயா் மருத்துவத் தொழில்நுட்ப சாதனங்களும், உயிா் காக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இரு வாரங்களில் வெகு விரைவாக அமைக்கப்பட்ட அந்த மருத்துவமனையை முதல்வா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்க உள்ளாா்.

இதுகுறித்து, அந்த மருத்துவமனையின் நிா்வாக அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா் கூறியதாவது:

புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையில், 25 படுக்கைகளில் வெண்டிலேட்டா் வசதிகள் உள்ளன. இதைத் தவிர அதி நவீன சி.டி.ஸ்கேன் சாதனமும் அங்கு ஒரே வாரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. கரோனா நோயாளிக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் தொலைக்காட்சி வசதி, நூலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் குறிப்பிடத்தக்க அம்சமாக யோகா பயிற்சிகள் அளிப்பதற்காக பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. காணொலி முறையில் அங்கு நோயாளிகளுக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும், நோயாளிகள், தங்களது உறவினா்களுடன் விடியோ அழைப்பில் பேச வை-‘ஃ’பை வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Leave a Reply