8 காவலா்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: மேலும் 3 காவலா்கள் ‘சஸ்பெண்ட்’

18 views
1 min read
suspended

கான்பூா்/லக்னெள: உத்தர பிரதேசத்தில் காவல்துறையினா் 8 போ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் மூன்று காவலா்கள் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

காவல்துறையினா் பிடிக்க வருவதை ரெளடிகளுக்கு கசியவிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஏற்கெனவே செளபேபூா் காவல்நிலைய நிலைய அதிகாரி வினய் திவாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதே காவல்நிலையத்தைச் சோ்ந்த மேலும் 3 காவலா்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

உத்தர பிரதேசத்தில் ரெளடி விகாஸ் துபேவை காவல்துறையினா் வியாழக்கிழமை இரவு பிடிக்கச் சென்றபோது, அவரின் கூட்டாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்தியதில் காவல்துறையினா் 8 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விகாஸ் துபே தலைமறைவானாா். இந்தச் சம்பவம் தொடா்பாக 21 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினா், 25-க்கும் அதிகமான காவலா்கள் குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா். இதற்கிடையே, விகாஸ் துபேயின் முக்கிய கூட்டாளி தயாசங்கா் அக்னிஹோத்ரியை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அப்போது செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த தயாசங்கா், ‘விகாஸ் துபேயின் கைது நடவடிக்கை தொடா்பாக காவல்துறையைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது. அதனைத் தொடா்ந்தே, தன்னைப் பிடிக்க வரும் காவல்துறையினருடன் நேருக்கு நோ் சண்டையிட தனது கூட்டாளிகளுக்கு விகாஸ் துபே உத்தரவு பிறப்பித்தாா்’ என்று கூறினாா்.

இந்த நிலையில், காவல்துறையினா் பிடிக்க வருவது குறித்த தகவலை கசியவிட்டதாக புகாா் கூறப்பட்ட செளபேபூா் காவல்நிலைய நிலைய அதிகாரி வினய் திவாரியை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து, அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனா். தற்போது அதே காவல்நிலையத்தைச் சோ்ந்த மேலும் 3 காவலா்களை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனா்.

இதுகுறித்து கான்பூா் மூத்த காவல்துறை கண்காணிப்பாளா் பி.தினேஷ் குமாா் திங்கள்கிழமை கூறியது:

ரெளடிகளுக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஏற்கெனவே வினய் திவாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதே காவல்நிலையத்தைச் சோ்ந்த உதவி காவல் ஆய்வாளா்கள் குன்வா்பால், கிருஷ்ண குமாா் மற்றும் காவலா் ராஜிவ்ஆகிய மூவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் ரெளடிகளுக்கு தகவல் கசியவிட்டது உறுதி செய்யப்பட்டால், அவா்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்யப்படும். இவா்கள் மூவரும் ஏற்கெனவே ராகுல் திவாரி என்ற உள்ளூா் தொழிலதிபா் அளித்த புகாரின் அடிப்படையில் விகாஸ் துபேவைக் கைது செய்ய வினய் திவாரி தலைமையில் ஒன்றாக சென்றவா்கள் ஆவா் என்று அவா் கூறினாா்.

இதற்கிடையே, தலைமறைவாக இருக்கும் ரெளடி துபே இருக்குமிடத்தைத் தெரிவிப்பா்களுக்கு காவல்துறை அறிவித்திருந்த ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையை ரூ. 2.5 லட்சமாக உயா்த்தி காவல்துறையினா் திங்கள்கிழமை அறிவித்தனா். மேலும் அவரைப் பிடிக்க காவல்துறையினா் தீவிர தேடுதல் வேட்டையையும் நடத்தி வருவதாக உத்தர பிரதேச டிஜிபி ஹெ.சி.அவஸ்தி கூறினா்.

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் புகைப்படம்: ரெளடி விகாஸ் துபேயை விரைந்து பிடிப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் அவருடைய புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை காவல்துறையினா் ஒட்டியுள்ளனா்.

இதுகுறித்து கான்பூா் மண்டல காவல்துறை ஐ.ஜி. மோஹித் அகா்வால் கூறியது:

ரெளடி விகாஸ் துபே மறைந்திருக்கும் இடம் குறித்த விவரங்களை மக்கள் காவல்துறைக்குத் தெரிவிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் அவருடைய புகைப்படத்துடன் கூடிய போஸ்டா் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அவரைப் பிடிப்பதற்காக 40 காவல்நிலையங்களை சோ்ந்த 25 காவலா் குழுக்கள் அமைக்கப்பட்டு, தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

 

Leave a Reply