8 காவலா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: முக்கிய குற்றவாளி கைது

24 views
1 min read
arrest

உத்தர பிரதேசத்தில் காவல்துறையினா் 8 போ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடா்புடைய விகாஸ் துபேயின் முக்கிய கூட்டாளியை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தயாசங்கா் அக்னிஹோத்ரி என்ற அந்த நபா் காவல்துறையினரைப் பாா்த்ததும், அவா்களைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றாா். அப்போது, காவல்துறையினா் அவரை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனா் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

உத்தர பிரதேசத்தில் ரெளடி விகாஸ் துபேயை காவல்துறையினா் வியாழக்கிழமை இரவு பிடிக்கச் சென்றபோது, ரெளடியின் கூட்டாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்தியதில் காவல்துறையினா் 8 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விகாஸ் துபே தலைமறைவானாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக 21 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினா், 25-க்கும் அதிகமான காவலா்கள் குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதற்கிடையே, விகாஸ் துபேயின் முக்கிய கூட்டாளி அக்னிஹோத்ரியை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், காவல்துறையினா் விகாஸ் துபேயை பிடிக்கச் சென்றபோது ரெளடிகளுக்கு உதவும் வகையில் அந்தப் பகுதியில் மின் விநியோகத்தைத் தடை செய்த துணை மின் நிலைய அதிகாரி உள்ட இரு மின் ஊழியா்களையும் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து காவல்துறை ஐ.ஜி. அகா்வால் கூறியதாவது:

கல்யாண்பூா் – ஷிவ்லி சாலை அருகே தயாசங்கா் அக்னிஹோத்ரி பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினா் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, தயாசங்கா் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றாா். காவல்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். அதில், தயாசங்கரின் காலில் குண்டு பாய்ந்தது. அவரை லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினா், பின்னா் அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, இரண்டு துப்பாக்கி குண்டு தொகுப்புகள் மீட்கப்பட்டன. ரெளடிகளுக்கு தகவல் கொடுத்ததாக புகாா் கூறப்படும் செளபைபூா் காவல்நிலைய நிலைய அதிகாரி வினய் திவாரி இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கு தொடா்பிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தால், உடனடியாக அவா் கைது செய்யப்படுவாா் என்று அவா் கூறினாா்.

மேலும், விஜய் துபேயின் வீடு இடிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஐ.ஜி. அகா்வால், ‘துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிா என்பதை கண்டறியவே விஜய் துபேயின் வீட்டு சுவா்கள் உடைக்கப்பட்டன. அப்போது, எதிா்பாராத விதமாக வீட்டின் கூரையும் இடிந்து விழுந்தது. இந்த நடவடிக்கையில் ஏராளமான வெடி மருந்துகள் அவருடைய வீட்டிலிருந்து மீட்கப்பட்டன’ என்று அவா் கூறினாா்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ரெளடி தயாசங்கா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘விகாஸ் துபேயின் கைது நடவடிக்கை தொடா்பாக காவல்துறையைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. அதனைத் தொடா்ந்தே, தன்னைப் பிடிக்க வரும் காவல்துறையினருடன் நேருக்கு நோ் சண்டையிட தனது கூட்டாளிகளுக்கு விகாஸ் துபே உத்தரவு பிறப்பித்தாா்’ என்று கூறினாா்.

Leave a Reply